ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Thursday, January 20, 2005

கண்களும் பார்வையும்

புத்தகக் கண்காட்சி முடிந்து விட்டது, அது பற்றிய ரிபோர்டிங்களும் ஓய்ந்துவிடும்.இனி புத்தகங்களைப் பற்றிப் பேசலாம்.


சுசி.கணேசன் என்ற பெயர் உங்கள் நினைவில் ஏதேனும் ஒலி எழுப்புகிறதா?தமிழக அரசின் சிறந்த படங்களுக்கான இரண்டு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் இது வரை இரண்டு படங்கள்தான் இயக்கி இருக்கிறார். விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார் என்ற அவரது இரண்டு படங்களுமே விருது பெற்றன.

அவர் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர். படிக்கும் போது படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர். நான் தினமணி ஆசிரியராக இருந்த போது, மாணவராக இருந்த அவரை அழைத்து, தினமணிக் கதிரில் ஒரு தொடர் எழுதச் சொன்னேன். நகர்புறக் கலாச்சாரத்தையே முதன்மைப்படுத்தி பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனவே, கிராமங்களின் கலாசாரம், நகர்மயமாகி வரும் சூழலில் அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பதிவு செய்யுங்களேன் என்று சொன்னதின் பேரில் அவர் 'வாக்கப்பட்ட பூமி' என்ற தொடரை எழுதினார். அது இப்போது புத்தகமாக வந்திருக்கிறது. அதில் கிராமப் பெரியவர்கள் பஞ்சாயத்தில் தீர்ப்புச் சொல்ல உட்காரும் முன் . " வேதாளம் சேருமேவெள்ளெருக்குப் பூக்குமேபாதாள மூலி படருமேமூதேவி சென்றிருந்து வாழ்வாளேமன்றோர் சொன்ன மனை" என்று சொல்லித்தான் விசாரணையை ஆரம்பிப்பார்களாம். அதாவது தவறாகத் தீர்ப்புச் சொன்னால், தீர்ப்புச் சொல்கிறவர்களின் குடும்பமே அழிந்து நிர்மூலமாகிவிடும் என்பதற்கான எச்சரிக்கை அது. இந்த அச்சம் நெடுங்காலத்திற்கு நியாயமான தீர்ப்புக்களை வழங்கி வந்திருக்கிறது.
சுசி. கணேசன் எழுதியிருந்த இன்னொரு விஷயம் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது:1966ம் வருடம். மதுரை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரி. புதிதாய் துவக்கப்பட்ட கல்லூரி.புதிது புதிதாய் மாணவர்கள்.வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒரு மாணவனுக்கு, புதிய சூழலும் தட்ப வெப்பமும் ஒத்துக் கொள்ளாமல், சூடு கிளம்பி விட்டது. கண்ணில் ஒரு 'கட்டி' புறப்பட்டு விட்டது. பிதுக்கு மருந்து (டியூப் மருந்து) வாங்கிப் போடலாம் என்கிற நினைப்பில் நாகமலைப் புதுக்கோட்டையிலிருக்கும் ஒரு பெட்டிக் கடைக்குத் தன் சகாக்களோடு வந்தார் அந்தக் கல்லூரி மாணவர். அப்போது இப்பகுதியெல்லாம் கிராமம்தான். "கண்ணுல போட ஏதாவது ஆயிண்மெண்ட் இருக்குதுங்களா?" பெட்டிக் கடைக்காரரிடம் கேட்க. "இந்த ஊரில அதெல்லாம் விக்காது தம்பி, மதுரைக்குத்தான் போகணும்" என்றார் அவர். சாமன்கள் வாங்க வந்து நின்ற ஒரு கிராமத்துப் பொம்பளைக்கு இந்த வார்த்தைகள் காதில் விழுந்தன. ஏறிட்டுப் பார்த்தாள். "என்னய்யா, இது, இத்தந்தண்டி கட்டியா கன்ணுல..."என்று விசாரித்துவிட்டு, "அமிர்தத்தை (தாய்ப்பால்) விட்டா சரியாப் போகும்.. செத்த கீழ உட்காரய்யா..."சொல்லிக் கொண்டே தன் நெஞ்சுப்பக்கம், கை கொண்டு போக, வெட்கத்தில் 'வேண்டாம்' என மறுத்தாராம் அந்தக் கல்லூரி மாணவர்.
"...ய்யா.. உங்க ஆத்தா அக்கான்னு என்ன நெனைச்சுக்க .. கண்ணக் காட்டு "என்றபடி தரையில் அவனை மண்டியிட வைத்து கடை வாசலில், ஊர்க்காரர்கள் பலர் நின்றிருக்க அந்த மாணவனின் கண்ணில் பால் பீச்சினார் கிராமத்துப் பெண்மணி.
"ஒண்ணும் பயப்படாதே! நாளைக்கு ஒருவாட்டி வந்து கண்ணுல விட்டுக்க.. கட்டி சருகு போலக் காஞ்சு போயிடும்.." அவள் பேசிக் கொண்டே போக அந்த மாணவனின் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.
மாணவர்கள் சென்ற பிறகு கடைக்காரரிடம் 'அந்தம்மா' சொன்னாராம்: "பெத்த தாய் தகப்பனை விட்டுட்டு, இம்புட்டு தூரம் வந்து நம்மூர்ல படிக்கிறதே இந்தப் புள்ளைக.. திரும்பவும் அதுக ஊர் போய் சேருற வரைக்கும் நாமதானய்யா தாய் தகப்பன்..."
இந்த சம்பவத்தை எழுதிவிட்டு, "இன்று இப்படி நடக்குமா? நடந்திருந்தால் அவளது புருஷனும் அந்த ஊரும் என்ன செய்திருக்கும்?" சினிமாவும் டிவியும் ஆண், பெண், குழந்தைகள், எல்லோர் பார்வையையும் மாற்றி விட்டன. மார்பகங்களை கவர்ச்சிப் பிரதேசமாக, காம உறுப்புகளாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறதே தவிர அவை தாய்மையின் சின்னங்கள் என்ற சிந்தனை யைத் தந்திருக்கவில்லை என்பது அவரது வாதம்.

உண்மைதானா?

(சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதிய பதிவு. சிங்கைக்கு வெளியில் உள்ள வாசகர்களுக்காக இங்கு பதிக்கப்படுகிறது)
----------------
மேலே உள்ள வலைப்பதிவு குறித்த ஒரு பின் குறிப்பு

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிதாக வலைபதிய அளித்துவரும் மைக்ரோசாஃப்ட் ஸ்பேசஸ் என்ற இடத்தில் நேற்று இந்த வலைப்பதிவை வெளியிட்டிருந்தேன். அதன் வார்ப்புருவும் (template) பயனர் அறியத் தரப்படாததால் அதில் 'திரட்டுவது தமிழ் மணம்' என்ற குறிப்பையும் சேர்க்க இயலவில்லை.
அந்த வலைப்பதிவை இங்கு மீண்டும் வெளியிடுகிறேன். வாரம் ஒரு முறை இதில் பதிவுகள் இட முயற்சிக்கிறேன்



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது