ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Wednesday, January 26, 2005

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோது - ஒரு eye witness account

தூக்கிலிடப்பட்டபோது கட்டபொம்மனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எனக்கு ஒரு Eye Witness Account - நேரில் பார்த்தவரது சாட்சியம் கிடைத்தது. அந்த சாட்சி, வேறு யாருமல்ல, அவனைத் தூக்கிலிட்ட ஆங்கிலேய அதிகாரி, மேஜர் பானர்மன்தான்.

அவர் அரசுச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதுகிறார்:" நேற்று நடைபெற்ற விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற பாளையக்காரனின் போக்கும் நிலையும், வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது என்பதைக் கவனித்தது குற்றமாகாது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டிய எட்டையபுரம் பாளையக்காரனையே அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தான்.சிவகிரி பாளையக்காரனைச் சினம் நிறைந்த வெறுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தான்.
தண்டனைக்காக அவனை அழைத்துச் சென்றபோது உறுதியுடனும் துணிவுடனும் சென்றான். அவன் இருபுறமும் கூடி நின்ற பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்துக் கொண்டே சென்றான். தூக்கு மேடைக்குச் செல்லும் வழியில் அவனுடைய தம்பியான ஊமைத்துரையைப் பற்றி மட்டும் சிறு கவலைகள் காட்டியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

தூக்குக் கயிறு இருந்த மரத்தினடிக்குச் சென்றவுடன் தான் கோட்டையை விட்டுச் சென்றிருக்கக் கூடாது அதைக் காப்பதிலேயே உயிர் துறந்திருப்பின் சிறப்பாய் இருந்திருக்கும் என்று நொந்து கூறினான்."

பானர்மன்னின் இந்தக் கடிதம் உள்பட பல அரசு அறிக்கைகள், ஆங்காங்கு உள்ள கோவில்களின் தல புராணங்கள், வாய் மொழி வழக்குகள், இலக்கியச் சான்றுகள் இவற்றைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் பிஷப் டாக்டர் கால்டுவெல் திருநெல்வேலிப் பகுதியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். 'திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரைமுறையாக முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் அவரே" என்று பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை குறிப்பிடுகிறார். (பிஷப் கால்டுவெல் பற்றிக் கேள்விப்பட்டிராதவர்களுக்கு ஓரு சிறு அறிமுகம்: கால்டுவெல் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த வெள்ளைக்காரர். 1838ம் ஆண்டு, தனது 24வது வயதில் திருநெல்வேலிக்கு வந்து, இடையன்குடி என்ற ஊரில் 53 வருடங்கள் வாழ்ந்து அங்கேயே மறைந்தார்)

அந்த திருநெல்வேலி சரித்திரம், 96 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நூலாக வந்துள்ளது. அதைத் தமிழாக்கம் செய்திருப்பவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர். பேராசிரியர். டாக்டர். ந.சஞ்சீவி அவர்கள்.

மரம் நட்டார், குளம் வெட்டினார், கோயில் கட்டினார், என்று அரசர்களது செயல்களை மட்டும் அடுக்கிக் கொண்டு போகாமல், கால்டுவெல், ஆங்காங்கே சாதாரண மக்களைப் பற்றியும் பேசுகிறார்.கிராமங்களில் புதைந்துள்ள பெருஞ் செல்வங்களை கெட்ட ஆவிகள் காத்து வருவதாகவும் அவற்றை வெளியே எடுத்தால் அந்த ஆவிகள் சினமுற்று ஊரையே அழித்து விடும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. பூதம் காத்த புதையல் போல என்று கேள்விப்பட்டிருப்பீர்களே.

கால்டுவெல் எழுதுகிறார்: "பல ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலிக் கலெக்டர் ஒருவர் புதையல் ஒன்றைத் தோண்டி எடுக்க முனைந்தார். அப் புதையல் பேய்களால் காக்கப்படுவதாக பலர் நம்பினர்.பலரால் எச்சரிக்கப்பட்ட போதிலும், அவர் ஐரோப்பியர் என்பதால், அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. முதல் நாள் வேலை முடிந்ததும் தனது கூடாரத்தில் இரவில் படுத்திருந்தார். காலையில், அவர், பல மைல்களுக்கப்பால் பாளையங்கோட்டையில் உள்ள தனது பங்களாவில் படுத்திருந்தார். அவரது கூடாரம் ஆற்றங்கரையில் வீசியெறியப்பட்டிருந்தது. அகழ்வாய்வு நடந்ததற்கான சுவடுகள் ஏதுமில்லை"

கால்டுவெல் இலங்கை பற்றியும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இலங்கையின் பெயர் தாமிரபரணி என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அது பற்றி அடுத்து எழுதுகிறேன்.

(ஒரு வாரம் காத்திருக்க வேண்டியிராது)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger Narain Rajagopalan said...

மன்னிக்கவேண்டும். எது உங்களின் தொடர்ச்சியாக எழுதப் போகும் வலைப்பதிவு. ஏன் கேட்கிறெனில், வாசகன் என்ற பெயரில் உங்களிடமிருந்து இரண்டு வலைப்பதிவுகள் உள்ளது, இதில் எதை நான் என் ரீடரில் சேர்க்க ? இரண்டுமே வா ? அல்லது எம்.எஸ்.என். ஸ்பேசஸ் பரிசோதனை முயற்சியா ?

2:09 PM

 
Anonymous Anonymous said...

கார்டுவெல் எழுதிய புத்தகத்தின் பதிப்பகத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்.

1:00 PM

 

Post a Comment

<< Home

 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது