ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Tuesday, March 08, 2005

வலைபூக்களால் தூக்கம் போச்சு!

பதிவுகளில் எதைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்று நட்சத்திரப் பதிவாளர் அருணா தனது பதிவில் தந்துள்ள பட்டியலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகளில் பதிவுகளைப்பற்றியும் பதியலாம்!
பின்னூட்டங்கள் பற்றி ஒரு வார்த்தை: ஒரு சாதாரண மனிதனுக்கு இணையத்தில் சொந்த வேலைகளைப் பார்க்கக் கிடைக்கிற நேரம் அதிக பட்சமாக மூன்று மணி நேரம். அலுவலகம் போகும் வரும் நேரத்தையும் சேர்த்து ஒரு பத்துமணி நேரம் வேலையில் போய்விடுகிறது. தூங்குவதில் 8 மணிநேரம். மீதமிருக்கும் 6 மணி நேரத்தில் உடல், மன ஆரோக்கியத்திற்காக (நடை, படிப்பு, குளியல் போன்ற சொந்த hygiene விஷயங்களுக்காக இரண்டு, மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது) மீதமுள்ள மூன்று மணி நேரத்தில்தான் இணையம் உள்பட பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தை நான் Goldern 180 என்று சொல்வதுண்டு. தூங்குவதைக் குறைத்துக் கொண்டால் இதை நீட்டிக்கலாம்தான். ஆனால் ஒரு இரவு ஒரு மணிநேரம் தூங்குவதைத் தள்ளிப் போட்டால் மறுநாள் அந்த ஒருமணி நேரத்தை எப்படியாவது உடல் கேட்டு வாங்கிக் கொண்டு விடுகிறது.
குடும்ப உறவுகள், நட்பு வட்டம் இவற்றைப் பேண சில சமயம் இந்த 3 மணி நேரத்தைக்கூட விட்டுக் கொடுக்க வேண்டி வந்து விடும்.

ஆனால் இந்த golden 180ல்தான் பலர் பல அற்புதங்களை செய்கிறார்கள். காசி தமிழ்மணத்தை ஒரு குழந்தை போல் பேணி தினம் தினம் அதை விதவிதமாக அலங்கரித்துப் பார்க்கிறார். சுரதா எழுத்துரு மாற்றி செய்து தருகிறார்.மதி படிக்கிறார், படம் பார்க்கிறார், எழுதுகிறார். பா.ராகவன் தலையணை தலையணையாக உலக அரசியல் சரித்திரம் எழுதுகிறார். வெங்கடேஷ் நேசமுடன் மடல் வரைகிறார்.மனுஷ்யபுத்ரன் கவிதைகள் புனைகிறார். அருண் வைத்தியநாதன் குறும்படம் தயாரிக்கிறார். சுபா கணினி, சங்கீதம், பயணம், புகைப்படம், மரபு அறக்கட்டளை, ஆரக்கிள், பி.எச்டி என்று ஏழெட்டு வேலைகள் செய்கிறார். இன்னும் பலர் என்னென்னவோ செய்கிறார்கள்.

இதில்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வலைப் பதிவில் எழுதுகிறார்கள். பின்னூட்டம் இடுகிறார்கள்.

எழுதுவதன் நோக்கம் திசைகளின் நோக்கம்தான் அதாவது "அறிதல் ஆக்கல் பகிர்தல்". ஆக்கத்திற்கும் பகிர்விற்கும் முதுகில் சின்னதாக ஒரு ஷொட்டு அல்லது தலையில் ஒரு குட்டு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது. கிடைக்காவிட்டால் ஏமாற்றம் ஏற்படுகிறது.அது மனித சுபாவம்.

ஆனால் சில சமயங்களில் பின்னூட்டங்கள் வெறும் அரட்டைக் கச்சேரியாகப் போய்விடுகின்றன. அசோகமித்ரன் என்ற எழுத்தாளர் 50 ஆண்டுகளை எழுத்துலகில் நிறைவு செய்ததை ஒட்டி ஒரு விழா. தமிழின் 'சிந்தனை டாங்கிகள்' (donkeyகள் அல்ல, tanks) பேசுகிறார்கள். அதை ரிபோர்ட் செய்து பத்ரி எழுதுகிறார். ஆனால் பத்ரி அணிந்து வந்தது அரைக்கால் சட்டையா முழுக்கால் சட்டையா, அது அரைக்காலா, அரைக்கையா இப்படித் திரும்பிவிடுகிறது பின்னூட்டங்கள்! அசோகமித்ரனின் 50 ஆண்டுகள், அரை நொடியில் காணாமல் போய்விடுகிறது. குறைந்த பட்சம் அவர் சோக மித்ரனா அல்லது அ-சோக மித்ரனா என்று தனிப்பட ஆராய்ந்தால் கூடப் பரவாயில்லை. இது ஓர் உதாரணம்தான்.

இது போன்ற பின்னூட்டங்களைப் படிக்கும் போது, ம்...கொடுத்து வைத்த மகராஜன்கள்/ மகராணிகள், எங்கிருந்துதான் இவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ என்று மிட்டாய்க்கடையைப் பார்த்த பிச்சைக்காரக் குழந்தை மாதிரி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு நகர்ந்து விடுவேன்.

இந்த மாதிரி ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கும். எனவே பின்னூட்டம் இல்லாத பதிவெல்லாம் படிக்கப்படாத பதிவுகள் என்றெண்ணிச் சோர்ந்து விட வேண்டாம்.

மற்றெந்த மொழி வலைப்பதிவுகளைக் காட்டிலும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு சில தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றிலொன்று அவையெல்லாம் ஒரே இடத்தில் திரட்டப்படுவது. அதனால் அநேகமாக எழுதப்படுவதெல்லாம் படிக்கப்படுகின்றன.

400வது பதிவாக காசி தனது பதிவை ஆரம்பித்தபோது எல்லோரும் ஏக மனதாக சீக்கிரமே 1000வது பதிவு வரட்டும் என்று ஆசீர்வதித்தார்கள். 1000 பதிவு வந்து அதில் பாதி அளவாவது தினமும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

Golden 180 போதாது. எனவே-

தூக்கம் போச்சு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

Anonymous Anonymous said...

//தமிழின் 'சிந்தனை டாங்கிகள்' (donkeyகள் அல்ல, tanks) பேசுகிறார்கள்//

எங்கப்பா குதிருக்குள் இல்லை :-)

9:10 AM

 
Blogger Kasi Arumugam said...

இந்த ஒரு கருத்தில் நான் பெரிதும் உடன்படுகிறேன். கிட்டத்தட்ட யாஹூ தூதுவனில் பேசவேண்டியதெல்லாம் வலைப்பதிவு மறுமொழியாகப் பதிவாகின்றன. என்னதான் 'அவரவர் விருப்பமே பிரதான'மானாலும், இது அந்த அந்த வலைப்பதிவருக்கே பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பது என் எண்ணம். உதாரணமாக ஒரு நாலைந்துபேர் திரும்பத் திரும்ப (அரை டவுசர் , டெம்ப்ளேட், மாதிரி) கவைக்காகாத விஷயத்தை தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது கனமாக எழுத நினைப்பவர்கூட ஒதுங்கிப்போய்விடுவார்.

ஒருமுறை என்னைத் தனிப்பட்டமுறையில் அறிந்த நண்பர் ஒருவர், இப்படித்தான் பொதுவாக அறியத்தேவைப்படாத ஒரு மறுமொழியை என் வலைப்பதிவில் இட்டதும் முதலில் நீக்கிவிட்டேன். அவரிடம் தனிமடலில் சொல்லியும் விட்டேன்.

மீண்டும் இது என் தனிப்பட்ட நம்பிக்கை. எடுத்துக்கொள்பவர் எடுத்துக்கொள்ளலாம்.

9:25 AM

 
Blogger Kasi Arumugam said...

//எனவே பின்னூட்டம் இல்லாத பதிவெல்லாம் படிக்கப்படாத பதிவுகள் என்றெண்ணிச் சோர்ந்து விட வேண்டாம்.//

வாசகர் பக்கத்தில் நடப்புப் பதிவுகளின் பின்னூட்ட நிலவரத்தை நீக்கிவிட்டத்ற்கு இது ஒரு முக்கியக்காரணம். இதற்கும், பணக்காரனே பணம் சம்பாதிப்பதும்,ஏழை ஏழையாகவே இருப்பதற்கும்கூட ஒற்றுமை இருக்கிறதென்று தோன்றுகிறது:-))

9:29 AM

 
Blogger Aruna Srinivasan said...

அச்சச்சோ..... என் கருத்தும் இதுதானே...! ஆனாலும் அப்பப்போ இளைஞர்கள் கொஞ்சம் கலாய்க்கறதையும் கண்டுக்காம விடணும் மாலன் சார் :-) எனக்கு நம்பிக்கை உண்டு. எவ்வளவுதான் அரட்டை அடித்தாலும் கடைசியில் கூட்டி கழித்து ஆக்கப்பூர்வமாக ஏதாவது விளையதான் செய்யும். என்ன, அப்பப்போ, வெட்டியா கூச்சல் போடாதீங்கப்பா... என்று ஒரு குரல் கொடுக்க வேண்டியதுதான் :-)

9:47 AM

 
Blogger Vijayakumar said...

சில நேரங்களில் வலைப்பதிவரை தொடர்பு கொள்ள தனி மின்மடல் ஐடி இல்லாததால் பின்னூட்டத்திலேயே சில நேரம் சொல்லவருவது இட வேண்டியாதாக இருக்கிறது. உதாரணத்துக்கு காசியை தனியாக தொடர்புக் கொள்ள அவர் மெயில் ஐடியை ரொம்ப தேட வேண்டியாதாகி போய் விட்டது. இந்த மாதிரி நேரத்தில் தான் பின்னூட்டங்கள் யாஹூ தூதுவன் போல் ஆகி விடுகிறான். எல்லாரும் அவர்கள் மெயில் ஐடிகளை வெளிப்படையாகக் கொடுப்பதில்லை. இதற்கு தமிழ் மணத்திலேயே வாசகர்களை தொடர்புக் கொள்ள தொடர்பு ஐடிகள், தொலைப்பேசி எண்கள் இருந்தால் இந்த மாதிரி பின்னூட்டங்கள் குறையலாம்.

மாலன் சார் சொல்லியக் கருத்துப்படி இப்போதிருக்கும் நிலைமையிலேயே எல்லா பதிவுகளையும் படிக்க முடியாமல் போய் விடுகிறது. இன்னும் பெருகினால் செலக்ட்டிவாக தான் படிக்க முடியுமென நினைக்கிறேன். வலைப்பதிவர்கள் நிறைய பேர் பாலிசி படி படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் குறைந்தது ஒரு வார்த்தையிலாவது பின்னூட்டமிட வேண்டும் என்ற பாலிசியை நடைமுறைப் படுத்த முயன்றுக் கொண்டிருக்கிறேன்.

10:08 AM

 
Blogger suratha yarlvanan said...

என்னுடைய golden180 அது அலுவலகத்தில் திருடுவது:)

12:07 PM

 
Blogger Dr.N.Kannan said...

மாலன்: இந்த அவதானத்தை என் பதிவில் சொல்ல மறந்துவிட்டேன். பின்னூட்டங்களின் கிராஃப் பார்த்தால், உச்சி வார நடுவிலும், தாழ்ச்சி வாரக் கடைசியிலும் இருக்கும். காரணம் பெரும்பாலோர் அலுவலகத்திலேயே தமிழ்மணம் பார்க்கின்றனர். எனது ஒலிப்பதிவுகளை பலர் கேட்க முடியாதற்கு இதுவொரு காரணம். கம்பெனிகளெல்லாம் இந்தக் காசி ஆறுமுகத்தை வலை போட்டுத் தேடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி. அதனால்தான் அவரின் மின்னஞ்சல் முகவரியே பலருக்குக் கிடைப்பதில்லை :-))

1:04 PM

 
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

மாலன்:
நல்ல பதிவு, நல்ல பார்வை. ஆனால் எனக்கு ஆச்சரியமூட்டுவது பின்னூட்டங்கள் அல்ல, வலைப்பதிவர்கள். சில வலைப்பதிவர்களுக்கு எப்படி வண்டி, வண்டியாக எழுதித் தள்ள முடிகிறது? பின்னூட்டங்கள் எழுதுவது எளிது. ஏற்கனவே யாராவது அடி எடுத்துக் கொடுத்துவிடுவதால் தொடுப்பது எளிதாகிறது. நேரமும் அதிகமாக எடுத்துக்கொள்ளாது. விவாதம் திசை திரும்புவதற்கு பெரும்பாலும் மூலப்பதிவில் தெளித்து வைக்கப்பட்டிருக்கும் மசாலாதான் காரணம் (நீங்கள் உதாரணமாகக் குறிப்பிட்ட பத்ரியின் 'அரைக்கால் சட்டை' உள்பட).

எனக்கு செய்தித்தாள், பத்திரிகைகளில் வாசகர் கடிதங்களை முதலில் படிப்பதில் தான் ஆர்வம். சராசரி மனிதரின் உணர்வுகளை சுருக்கமாக வெளிப்படுத்தும். மூலக்கட்டுரைகள், செய்திகள் தொடாத அம்சங்களை கடிதங்கள் தொட்டுச்செல்லும். வலைப்பதிவுகளில் பல பின்னூட்டங்கள் அரட்டைக் கச்சேரிகளாக மாறிவிட்டாலும், சில பின்னூட்டங்கள் பதிவுகளை புதிய ஒளியில் அணுகுவதைக் காணலாம். பதிவின் மூலபொருளைக் குறித்த மாற்றுக் கருத்துக்கள் பெரும்பாலும் முதல் சில பின்னூட்டங்களிலேயே சொல்லப்பட்டு விடுகின்றன. ஐந்து பின்னூட்டங்களுக்கு மேலிருந்தால் தைரியமாகச் சொல்லிவிடலாம்--விவாதம் ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டதென்று. ஆகையால் பின்னூட்டங்களைப் பற்றி அலுத்துக்கொள்ளத் தேவையில்லை

எனது வலைப்பதிவு நேரத்தை இப்படி செலவழிக்கிறேன்:
1. மற்றவர்களின் பதிவைப் படிப்பது
2. பதிவுகளைப் பற்றி புதிய கருத்து இருந்தால் எழுதுவது.
3. அதையும் மீறி நேரம் இருந்தால் புதிதாக பதிவு எழுதுவது.

சுந்தரமூர்த்தி

4:36 PM

 

Post a Comment

<< Home

 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது