ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Tuesday, February 08, 2005

பத்ரி குறிப்பிட்டிருப்பதாலும், சிஃபி தளத்தில் உள்ள அமுதசுரபி இன்னமும் பிப்ரவரி இதழை வெளியிடாததாலும், என் கட்டுரையை வாசிக்க விரும்பும் வாசகர்களின் ஆர்வம் கருதி அந்தக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். ( இது ஜன்னலுக்கு வெளியே பதிவில்தான் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பத்ரியின் இணைப்பு இந்தப் பதிவைச் சுட்டுவதால், வாசகர்களின் வசதி கருதி இது இங்கே வெளியிடப்படுகிறது.)


இனி 'ஹேப்பி பொங்கல்' இல்லை!

(இதுதான் நான் தந்த தலைப்பு)

அல்லது

ஒரு பெரும் பாய்ச்சல்

பொங்கல் நாளன்று என் கைத் தொலைபேசிக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தன. பெரும்பாலும் ஹேப்பி பொங்கல் என்ற ஆங்கில வாழ்த்துக்கள்.சில பொங்கல் பானை, கரும்பு ஆகியவற்றுடன் பொங்கல் வாழ்த்துக்கள் என்ற வாசகத்தையும் படமாக ஆக்கி அனுப்பப்பட்ட சித்திரச் செய்திகள் (Picture messgages). கைத்தொலை பேசியில் உள்ள விசைகளைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் செய்திகள் அனுப்புவது போல, தமிழில் அனுப்ப முடியாதா?
இனி இந்தக் கேள்விக்கு இடமில்லை. இந்தப் பொங்கலன்று சிங்கப்பூர் வானொலியான ஒலி, முரசு அஞ்சலைத் தமிழுக்குத் தந்த முத்து நெடுமாறனுடன் இணைந்து கைத்தொலைபேசிகளில் தமிழிலேயே குறுஞ்செய்திகளை அனுப்பும் தொழில்நுட்பத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது. உலகின் முதல் தமிழ்க் குறுந்தகவலை கவிஞர் வைரமுத்து அனுப்பி அந்த சேவையைத் தொடங்கி வைத்துள்ளார்.
கைத்தொலைபேசிக்குத் தமிழை எடுத்துச் சென்றது தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் பாய்ச்சல்.ஒரு தலைமுறை காகிதத்தில் கையால் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இன்னொரு தலைமுறை கணினி கொண்டு இணையத்தில் எழுதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய இளந்தலைமுறை கணினியை விடக் கைத்தொலைபேசியின்பால் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறது. முத்து நெடுமாறனின் இந்த முயற்சியின் மூலம் தமிழ் இன்னொரு தலைமுறையை நெருங்க அடியெடுத்து வைக்கிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற பாய்ச்சல்களைத் தமிழ் தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் எதிர் கொள்ளும். முத்து நெடுமாறன் மலேசியாவில் இதற்கான முயற்சியில் இறங்கியிருந்த அதே வேளையில் தமிழ்நாட்டில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பாஸ்கரன் இதே போன்றதொரு திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழில் எழுத்துக்கள் 36 (12 உயிர்+18 மெய்+6 கிரந்த எழுத்துக்கள்) கைத்தொலைபேசியில் உள்ள விசைகள் 9 (12 விசைகளில் 3 விசைகள் அதன் இயக்கத்திற்குத் தேவை) எனவே ஒரு விசையை ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுக்கு ஒதுக்க வேண்டும். ஒரு சொல்லை எழுத பலவிசைகளை பல முறை அழுத்த வேண்டிய நிலை. நீளமான செய்திகளை எழுதும் போது இதனால் அலுப்புத் தட்டும். இதைத் தவிர்ப்பதற்காக ஒரு எழுத்தை உள்ளிடும் போதே அதற்கு அடுத்த எழுத்து எதுவாக இருக்கும் என ஊகித்துக் கொள்ளும் வகையில் அமைத்து விட்டால் நிலமையை எளிதாக்கலாம். இதை predictive text input என்று சொல்கிறோம். இதை சாத்தியமாக்க ஒரு சொற்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். தமிழில் அது எளிதல்ல. ஏனெனில், தமிழில், பால், திணை, ஒருமை-பன்மை, காலம் இவற்றை சொல்லின் இறுதியில்தான் (விகுதியில்) வெளிப்படுத்துகிறோம். படித்தான், படித்தாள் இரண்டிற்கும் இறுதி எழுத்து மட்டும்தான் வித்தியாசம். கைத் தொலைபேசியில் ன், ள் இரண்டும் ஒரே விசையில் (L, n) அமைந்திருக்கும் போது சிக்கல் அதிகமாகிறது. தமிழில் உள்ளிடுவதற்கான predictive text system ஐ பாஸ்கரன் உருவாகியிருக்கிறார்.
தமிழ் ஓர் ஆச்சரியமான மொழி. சொல் என்ற வார்த்தைக்கு பேசு என்று அர்த்தம். வார்த்தை என்றும் அர்த்தம். உரை என்ற சொல்லுக்கு பேசு என்று பொருள். எழுதப்பட்ட உரை என்றும் பொருள். பேச்சு, எழுத்து என்ற இரு வழக்குகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இந்தச் சொற்களே புலப்படுத்தும். நாம் உச்சரிக்கும் ஒரு வார்த்தையைக் கணினி விளங்கிக் கொண்டு அதை உரையாக மாற்றிக் கொடுத்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்!. பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மாதரசி இதற்கான தொழில்நுட்பத்தில் முனைந்திருக்கிறார். ஐ.ஐ.டியிலும் இதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. "ஆங்கிலத்தில் இல்லாத ஒரு வசதி தமிழில் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை பலவகைகளில் உச்சரிக்கிறார்கள். மாதரசியை ஆங்கிலத்தில் மதராசி என்று படிப்பவர்கள் உண்டு. Coffee என்ற சொல்லில் O என்ற எழுத்து ஆ என்றும் E என்ற எழுத்தி இ என்றும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால் தம்ழில் ஒரு எழுத்தை அதற்குரிய ஒலியில்தான் உச்சரிக்க முடியும். க, ச, ப போன்ற எழுத்துக்கள் அதன் முன் வரும் ஒற்றின் அடிப்படையில் உச்சரிப்பில் மாற்றம் பெறுகின்றன. தங்கம் என்பதி வரும் 'க'வை கப்பலில் வரும் 'க' போல ஒரு போதும் உச்சரிக்க முடியாது. இது தமிழில் பேச்சை உரையாக்கும் தொழில்நுட்பத்தை எளிதாக்குகிறது"என்கிறார் மாதரசி. உண்மைதான். ஆனால் தமிழில் 'காகம்' இருக்கிறதே, அது பிரசினை தருமோ?
பேச்சை உரையாக்குவது இருக்கட்டும். பேசுவதற்கு ஏற்ற உரையைத் தயாரிக்கவும் கணினியைப் பயன்படுத்தலாம். இந்திய அறிவியல் கழக (IISc) பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் அண்மையில் ஒரு சுவையான தகவலைப் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை இந்தி தெரியாத ஒருவர், இந்தியில் உரையாற்ற வேண்டியிருந்தது. அவருக்கு உரை நிகழ்த்துகிற அளவிற்கு இந்தி தெரியாது. இந்தி உரையை தமிழ் எழுத்துக்களில் ஒலி பெயர்த்துக் கொடுத்துவிட்டது கணினி. அதாவது இந்தியில் பாரத் என்று எழுதப்பட்டிருந்தால் அது தமிழில் பா-ர-த் என்று எழுதிவிடும். அதைப் பார்த்து இந்தியில் பேசுவது போலவே படித்து (நடித்து) விடலாம். சாதனா சர்கம் தமிழில் பாடுகிறாரே அதே டெக்னிக்தான்.

இதற்காக 'ஓம்' என்ற மென்பொருள் பொதியை (Software package) பேராசிரியர் பாலகிருஷ்ணன் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இது போன்ற ஒலிபெயர்ப்புகள் (Transliteration) எளிதாகிவிட்டால் மொழி என்னும் தடையைக் கடந்து விடலாம்.
ஆனால் உணர்வு ரீதியான பிணைப்பு ஏற்பட வேண்டும் என்றால் அது மொழிபெயர்ப்புகள் மூலம்தான் சாத்தியம். கணினிகள் மொழிபெயர்க்கவும் செய்கின்றன. (Machine Translation) அதையும் பேராசிரியர் பாலகிருஷ்ணன் செய்து காட்டினார். ஆனால் இந்தத் தொழில்நுட்பம் இன்னும் மேம்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறது. இப்போது கணினி மொழிபெயர்த்துத் தரும் பிரதியை மொழி அறிந்தவர்களைக் கொண்டு மெய்ப்புப் பார்த்து பயன்படுத்திக் கொள்ளும் நிலை இருக்கிறது. மொழிபெயர்ப்பை விரைவாக செய்து கொள்ள அது போதுமானது.
பேராசிரியர் பால கிருஷ்ணன் இன்னொரு பணியில் முனைப்பாக இருக்கிறார். அது அச்சு வடிவில் உள்ள பத்து லட்சம் நூல்களை இலக்கப்பதிவாக்குவது (digitalisation). 90 ஆயிரம் புத்தகங்கள் இலக்கப்பதிவாக்கப்பட்டுள்ளன. அதில் 30 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இந்திய மொழிப் புத்தகங்கள். குடியரசுத்தலைவர் மாளிகை நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் இலக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்படி இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இலக்கப்பதிவு சாத்தியமாயிற்று? ஒளி உணரி (optical Character recognition) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புத்தகத்தை ஸ்கேன் செய்தால் அது கணினியில் உரையாக மாறிவிடும். பின் அதை மற்ற கணினி ஆவணங்களைப் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி இலக்கப்பதிவு பெற்ற நூல்கள் இணையத்தில் ஒரு மின் நூலகமாக அமைக்கப்பட்டு வருகிறது
இணையத்தில் உள்ள புத்தகக் கடையான அமோசான். காமில் தமிழ் புத்தகங்களை வாங்க முடியாத நிலை இருக்கிறது. அந்தக் குறையை காமதேனு என்ற இணையதளத்தின் மூலம் போக்கியிருக்கிறார் பத்ரி சேஷாத்ரி. வீட்டில் கணினி முன் அமர்ந்தபடியே நீங்கள் புத்தகங்களுக்கு ஆர்டர் செய்யலாம். நீங்கள் ஆர்டர் செய்த புத்தகம் இரண்டொரு தினங்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும். புத்தகக் கண்காட்சி நெரிசலைத் தவிர்க்கலாம் என்பது மட்டுமல்ல, வருடத்தின் 365 நாளும் புத்தகக் கண்காட்சி - இணையத்தில். பெருந்தன்மையாக தன்னுடைய கிழக்குப் பதிப்பக நூல்களுக்கு மட்டுமன்றி பல பதிப்பாளர்களின் நூல்களை இதன் மூலம் பெற வகை செய்திருக்கிறார் பத்ரி.
இங்கு சொல்லப்பட்டவையெல்லாம் ஒரு முன்னோட்டம்தான். இது ஒவ்வொன்றைக் குறித்தும் தனித் தனிக் கட்டுரைகள் எழுதலாம். எழுதப்பட வேண்டும். ஆனால் தமிழர்கள் எப்படி ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தையும் தங்கள் மொழிக்குக் கொண்டுவந்து தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதை இது கோடி காட்டும். அந்தத் திசையில் நீங்களும் ஒரு அடி எடுத்து வைக்கலாம். உங்களிட்ம் ஒரு கணினி இருந்தால், அதைக் கொண்டு தமிழில் எழுதுவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நானும் என் நண்பர்களும் உதவக் காத்திருக்கிறோம், இலவசமாக.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 04, 2005

தொடர்ந்து நடக்கிறாள் தாமிரபரணி

'தாமிரம் வரு(ம்) நீ(ர்) ' என்பது தாமிரவருணியின் பெயர்க்காரணமாக இருக்கலாம் என்று திருமலை கருதுகிறார். அவர் தந்தை ஆற்றுப் படுகையிலிருந்து தாமிரம் சேகரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். தாமிரபரணி நீரில் தாமிரம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தாமிரபரணி ஆற்றின் கரையில், நெல்லைக்கு அருகில், செப்புத் தகடுகளால் கூரை வேயப்பட்ட நடராஜர் கோயில் ஒன்று இருக்கிறது. தாமிரசபை என்று அதற்குப் பெயர். தில்லையில் அமைந்த பொன்னம்பலத்தைப் போல தாமிரத்தால் உருவாக்கப்பட்ட முயற்சி. அதையும் கூட நதியின் பெயர்க் காரணமாகச் சொல்பவர்கள் உண்டு.

தாமிரத்திற்கும் தாமிரபரணிக்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரிதியாக ஆராயத்தக்கது.

வடநாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன், அந்தச் சொல்லை சிவப்பு என்ற அர்தத்தில் பயன்படுத்தியதாக ஈழநாதன் குறிப்பிட்டிருக்கிறார். வடமொழி மகாபாரதத்திலும், காளிதாசனுடைய ரகுவம்சத்திலும் தாமிரபரணி என்றே குறிப்பிடப்படுவதால் அது வடமொழிச் சொல், அல்லது வடமொழியிலும் வழக்கில் இருந்த சொல் என்பது தெளிவாகிறது.
வடநாட்டில் இருந்தவர்கள் தாமிரபரணி தீரத்தில் வந்து குடியேறி இருக்கலாம். காவிரியைப் போல் இரு பருவ மழைகளிலும் நீர் பெற்று ஆண்டு முழுவதும் வற்றாமல் ஒடிக் கொண்டிருந்த நதி அது.( ஓராண்டிற்கு மலை உச்சியில் 300 அங்குலம் மழை பெய்ததாக திருவாங்கூர் மன்னரது வானிலை ஆய்வாளர்களது பதிவு இருக்கிறது) தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலை ஐந்து சிகரங்களைக் கொண்டது என்றாலும் அகன்ற தளத்தைக் கொணடது. நதியும் அதனூடே கணிசமான தூரம் நடக்கிறது. எனவே அதன் வண்டல் அதிகம். அந்த வண்டல் சேரும் பகுதிகள் - ஸ்ரீவைகுண்டத்தில் துவங்கி நதி கடலில் கூடும் துறை வரை - இப்போதும் வளமான பகுதி. எனவே அங்கு குடியேற்றங்கள் ஏற்படுவது இயல்பு.


வடமொழி இலக்கியங்கள் நதியைத் தாமிரபரணி என்று சொன்னாலும், தமிழிலக்கியங்கள் அந்தப் பெயரில் நதியைக் குறிப்பிடவில்லை. பொருநை என்றுதான் குறிப்பிடுகின்றன. நம்மாழ்வார் 'பொருநல் வடகரை' என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். பொருத்தம் என்பதே பொருநல் என மருவியிருக்க வேண்டும் எனக் கலைகளஞ்சியம் கருதுகிறது. அதற்கு சான்றாக முதல் ராஜராஜனுடைய கல்வெட்டு ஒன்று (ஆண்டு 1013) சீவலப்பேரிக்கு அருகில் சித்ரா நதி தாமிரபரணியோடு கலக்குமிடத்தை தண் பொருத்தம் என்று குறிப்பிடுவதைச் சுட்டுகிறது. ( தண் என்றால் குளிர்ந்த என்று அர்த்தம் தண் நீர் குளிர்ந்த நீர். வெந் நீர் சூடான நீர்) சேக்கிழார் பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டைத் தண் பொருந்தப் புனல் நாடு என்று குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டில் வாழந்த பாரதி கூட தாமிரபரணி என்று குறிப்பிடுவதில்லை. 'காவிரி தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்ட வையை பொருநை என மேவிய பல ஆறு' என்றுதான் அவனது பட்டியல் நீள்கிறது.

பொருத்தம் > பொருந்தல் > பொருநல் > பொருநை > பூர்ண > பூரணி > பரணி என்றாகி இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். ஊகம்தானே தவிர ஆராய்ந்தறிந்த முடிவல்ல. வேறு சாத்தியங்கள் இருந்தால் நண்பர்கள் சொல்ல வேண்டும்.

இன்றைய தாமிரபரணி பற்றியும் திருமலை குறிப்பிட்டிருக்கிறார். முற்றிலும் உண்மை. பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது.இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

அயல் நாட்டில் வாழும் நெல்லைத்தமிழர்கள் யாரேனும் உதவ முடியுமா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 02, 2005

தாமிரபரணி என்றால் இலங்கை!

திருநெல்வேலிக்காரர்களின் மனதிற்கு இனிப்பான விஷயம் அல்வா அல்ல, தாமிரபரணி. தமிழுக்கு அடுத்தபடியாக அவர்கள் உரிமையோடு பெருமைப்பட்டுக் கொள்கிற விஷயம் அந்த நதி.

பொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் அந்த நதியின் பயணம் சில நூறு கிலோமீட்டர்கள்தான். ( 70 மைல்) ஆனால் அதன் வரலாறு மிகப் பெரியது. வடமொழியில் உள்ள மகாபாரதத்தில். "குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்" என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. காளிதாசனின் ரகு வம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்ததாக ஒரு பாடல் உண்டு. காளிதாசன் கிறிஸ்துவிற்கு ஓராண்டு முன் பிறந்தவன்.

இதன் ஒரு கிளைநதியான சித்ராநதிதான் குற்றாலத்தில் அருவியாக விழுகிறது."உலக்த்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது"என்று கால்டுவெல் எழுதுகிறார்.வெள்ளைக்காரர்கள் சொல்வது கிடக்கட்டும். திருநெல்வேலிக்காரர்களைக் கேட்டால் தாமிரபரணியில் எங்கு குளித்தாலும் புண்ணியம் என்று சொல்வார்கள்.

திருநெல்வேலிக்காரர்களின் 'செண்டிமெண்ட்'டோடு இப்படிக் கலந்து விட்ட நதி தாமிரபரணி.ஆனால் தாமிரபரணி என்ற சொல் நதியைக் குறித்தது அல்ல, அந்தச் சொல் இலங்கையைக் குறிப்பது என்கிறார் கால்டுவெல்!

தாமிர என்றால் சிவப்பு. பரணி என்றால் இலை. தாமிரபரணி என்றால் சிவப்பு இலைகளைக் கொண்ட மரம் ( ஒரு வேளை கனடாவின் Maple மரமோ?) என்றுதான் பொருள்படும். இந்தப் பெயர் மரத்துக்குப் பொருந்தலாம். நதிக்கு எப்படி பொருந்தும்?

சிவப்பு மலர்களை உடைய நீர்த்தேக்கம் என்ரு ஒருவர் விளக்க முற்படுகிறார். அது ஏற்புடையதாக இல்லை என்று தள்ளி விடும் கால்டுவெல் வேறு ஒரு விளக்கம் தருகிறார்:

"இந்தப் பெயர் இலங்கையின் பழம் பெயராய் இருந்தது என்பது கருதத்தக்கது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் முற்காலத்து புத்த மதத்தினரால் அது (இலங்கை) தாம்ரபன்னி (Tambapanni) என்று வழங்கப்பட்டது என்பது ஜிர்னரில் (Girnar) உள்ள அசோக மன்னன் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. மகா அலெக்சாந்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றியும், அதிலுள்ள் நாடுகளைப் பற்றியும் அந்நாட்டில் வாழும் மக்களைப் பற்றியும், அதன் அருகே உள்ள நாடுகளைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது இந்தியாவை அடுத்துப் பெரியதொரு தீவு உள்ளதென்பதும், அதன் பெயர் தப்ராபனி (Taprobane) என்பதும் அறிந்தார்கள். தப்ராபனி என்பது தாம்ரபன்னி என்பதன் தவறான உச்சரிப்பே ஆகும்.
தம்ராபன்னி அல்லது வடமொழியில் சரியாக எழுதப்பட்ட பெயரான தாம்ரபரணி என்பது விஜயனும் அவனுடைய கூட்டத்தாரும் இலங்கையில் குடியேறிய முதற் நிலப்பகுதிக்கு இட்ட பெயர் என்பதும், அப்பெயரிலிருந்து முழுத்தீவுக்கும் அப்பெயர் வந்தது என்பதும் மகாவமிசத்தில் குறிக்கப்பட்டுள்ளன (Turnourன் மகாவமிசம் பக்கம் 57)


இந்தக் குடியிருப்பு சிலோனின் மேற்குக் கடற்கரையில் உள்ள புட்லம் என்ற ஊரின் அருகே உள்ளது ( புத்தளத்தைச் சொல்கிறாரோ?) என்று தெரிகிறது. இது ஏறக்குறைய திருநெல்வேலியின் முக்கிய ஆற்றின் கூடுதுறைக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த இரு பெயர்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டனும், இங்கிலாந்தின் பாஸ்டனும் போல ஒரு பொதுவான மூலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கொள்ளலாம்"என்று எழுதியிருக்கிறார் கால்டுவெல்.

என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் இவைதான்:

  1. இலங்கைக்கு தாமிரபரணி என்று பெயர் உண்டா?
  2. விஜயனும் அவனது கூட்டத்தினரும் எங்கிருந்து போய் இலங்கையில் குடியேறினார்கள்? தென் தமிழ் நாட்டிலிருந்தா? (கலிங்கத்திலிருந்து என்று படித்த நினைவு)
  3. பாண்டியன் மகளை விஜயன் மணந்ததாகச் சொல்வார்கள். அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
  4. இலங்கையில் ஒரு திருநெல்வேலி இருக்கிறதல்லவா? அந்தப் பெயர் அதற்கு எப்படி ஏற்பட்டது?


யாராவது என் சந்தேகங்களுக்கான விடைகளைத் தர முடியுமா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது