ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Wednesday, January 26, 2005

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோது - ஒரு eye witness account

தூக்கிலிடப்பட்டபோது கட்டபொம்மனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எனக்கு ஒரு Eye Witness Account - நேரில் பார்த்தவரது சாட்சியம் கிடைத்தது. அந்த சாட்சி, வேறு யாருமல்ல, அவனைத் தூக்கிலிட்ட ஆங்கிலேய அதிகாரி, மேஜர் பானர்மன்தான்.

அவர் அரசுச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதுகிறார்:" நேற்று நடைபெற்ற விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற பாளையக்காரனின் போக்கும் நிலையும், வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது என்பதைக் கவனித்தது குற்றமாகாது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டிய எட்டையபுரம் பாளையக்காரனையே அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தான்.சிவகிரி பாளையக்காரனைச் சினம் நிறைந்த வெறுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தான்.
தண்டனைக்காக அவனை அழைத்துச் சென்றபோது உறுதியுடனும் துணிவுடனும் சென்றான். அவன் இருபுறமும் கூடி நின்ற பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்துக் கொண்டே சென்றான். தூக்கு மேடைக்குச் செல்லும் வழியில் அவனுடைய தம்பியான ஊமைத்துரையைப் பற்றி மட்டும் சிறு கவலைகள் காட்டியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

தூக்குக் கயிறு இருந்த மரத்தினடிக்குச் சென்றவுடன் தான் கோட்டையை விட்டுச் சென்றிருக்கக் கூடாது அதைக் காப்பதிலேயே உயிர் துறந்திருப்பின் சிறப்பாய் இருந்திருக்கும் என்று நொந்து கூறினான்."

பானர்மன்னின் இந்தக் கடிதம் உள்பட பல அரசு அறிக்கைகள், ஆங்காங்கு உள்ள கோவில்களின் தல புராணங்கள், வாய் மொழி வழக்குகள், இலக்கியச் சான்றுகள் இவற்றைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் பிஷப் டாக்டர் கால்டுவெல் திருநெல்வேலிப் பகுதியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். 'திருநெல்வேலி நாட்டுச் சரித்திரத்தை வரைமுறையாக முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் அவரே" என்று பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை குறிப்பிடுகிறார். (பிஷப் கால்டுவெல் பற்றிக் கேள்விப்பட்டிராதவர்களுக்கு ஓரு சிறு அறிமுகம்: கால்டுவெல் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த வெள்ளைக்காரர். 1838ம் ஆண்டு, தனது 24வது வயதில் திருநெல்வேலிக்கு வந்து, இடையன்குடி என்ற ஊரில் 53 வருடங்கள் வாழ்ந்து அங்கேயே மறைந்தார்)

அந்த திருநெல்வேலி சரித்திரம், 96 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நூலாக வந்துள்ளது. அதைத் தமிழாக்கம் செய்திருப்பவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர். பேராசிரியர். டாக்டர். ந.சஞ்சீவி அவர்கள்.

மரம் நட்டார், குளம் வெட்டினார், கோயில் கட்டினார், என்று அரசர்களது செயல்களை மட்டும் அடுக்கிக் கொண்டு போகாமல், கால்டுவெல், ஆங்காங்கே சாதாரண மக்களைப் பற்றியும் பேசுகிறார்.கிராமங்களில் புதைந்துள்ள பெருஞ் செல்வங்களை கெட்ட ஆவிகள் காத்து வருவதாகவும் அவற்றை வெளியே எடுத்தால் அந்த ஆவிகள் சினமுற்று ஊரையே அழித்து விடும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. பூதம் காத்த புதையல் போல என்று கேள்விப்பட்டிருப்பீர்களே.

கால்டுவெல் எழுதுகிறார்: "பல ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலிக் கலெக்டர் ஒருவர் புதையல் ஒன்றைத் தோண்டி எடுக்க முனைந்தார். அப் புதையல் பேய்களால் காக்கப்படுவதாக பலர் நம்பினர்.பலரால் எச்சரிக்கப்பட்ட போதிலும், அவர் ஐரோப்பியர் என்பதால், அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. முதல் நாள் வேலை முடிந்ததும் தனது கூடாரத்தில் இரவில் படுத்திருந்தார். காலையில், அவர், பல மைல்களுக்கப்பால் பாளையங்கோட்டையில் உள்ள தனது பங்களாவில் படுத்திருந்தார். அவரது கூடாரம் ஆற்றங்கரையில் வீசியெறியப்பட்டிருந்தது. அகழ்வாய்வு நடந்ததற்கான சுவடுகள் ஏதுமில்லை"

கால்டுவெல் இலங்கை பற்றியும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இலங்கையின் பெயர் தாமிரபரணி என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அது பற்றி அடுத்து எழுதுகிறேன்.

(ஒரு வாரம் காத்திருக்க வேண்டியிராது)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, January 25, 2005

ஒரு குறுந்தட்டில் 10 நாவல்கள்,75 சிறுகதைகள்

அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலைஓசை, தியாகபூமி உள்ளிட்ட 10 நாவல்களையும், அவரது 75 சிறுகதைகளையும் ஒரு குறுந்தட்டாகப் பதிப்பித்திருக்கிறது சென்னையில் உள்ள ஒரு நிறுவனம்.

இடப் பிரசினை காரணமாக வீடுகளில் புத்தகமாக சேமிக்க முடியாதவர்களுக்கும், வேலை நிமித்தமாக ஊர் விட்டு ஊர் போகிறவர்களுக்கும், அஞ்சல் மூலம் நூல்களைத் தருவிப்பது சிரமமானதாகக் கருதும் அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இது வசதியனதுதான். இப்போதெல்லாம் நூல்கள் யானை விலை, குதிரை விலை என்று நினைப்பவர்களுகம் கூட இதை விரும்பக் கூடும் ( இத்தனை நூல்கள் கொண்ட குறுந்தகடின் விலை ரூ.199) ஆனால் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் பொன்னியின் செல்வன் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது ( நக்கீரன் ஸ்டாலில்) அவர்கள் இணைய வசதி இருந்தால் பொன்னியின் செல்வனை இலவசமாகவே மதுரைத் திட்டத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது வேறு. மணியம் அவர்களின் ஓவியம் இல்லாமல் பொன்னியன் செல்ல்வனை வெறும் உரைக் கோப்பாக வாசிப்பது அவருடைய ஓவியங்களுடன் வாசிப்பதைப் போன்ற அனுபவத்தைத் தருமா? நந்தினி, பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் எல்லோரும் மனச் சித்திரமாகப் பதிந்து கிடக்கிறார்கள். அதனால் அந்தப் பாத்திரங்களின் உரையாடல்களைப் படிக்கும்போது அவை ' பேசுவது' போல ஓரு பிம்பம் கிடைக்கும். அது இதில் கிடைக்குமா? அல்லது இது போன்ற பிரமைகள் கல்கியில் தொடர்கதையாக, அல்லது கல்கியின் பைண்ட் வால்யூம்களில், படிக்காத, நேரடியாகப் புத்தகமாகப் படித்தவ்ர்களுக்கு ஏற்படாதா?

இது போன்ற அனுபவம் பொன்னியின் செல்வனுக்கு மட்டும்தானா? அல்ல்து மற்ற கதைகளைப் படிக்கும் போதும் ஏற்படுவதுண்டா?

( நான் படித்த புத்தகம் பற்றிய அறிமுகம் அடுத்த பதிவில், நாளை)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, January 20, 2005

கண்களும் பார்வையும்

புத்தகக் கண்காட்சி முடிந்து விட்டது, அது பற்றிய ரிபோர்டிங்களும் ஓய்ந்துவிடும்.இனி புத்தகங்களைப் பற்றிப் பேசலாம்.


சுசி.கணேசன் என்ற பெயர் உங்கள் நினைவில் ஏதேனும் ஒலி எழுப்புகிறதா?தமிழக அரசின் சிறந்த படங்களுக்கான இரண்டு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் இது வரை இரண்டு படங்கள்தான் இயக்கி இருக்கிறார். விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார் என்ற அவரது இரண்டு படங்களுமே விருது பெற்றன.

அவர் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர். படிக்கும் போது படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர். நான் தினமணி ஆசிரியராக இருந்த போது, மாணவராக இருந்த அவரை அழைத்து, தினமணிக் கதிரில் ஒரு தொடர் எழுதச் சொன்னேன். நகர்புறக் கலாச்சாரத்தையே முதன்மைப்படுத்தி பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனவே, கிராமங்களின் கலாசாரம், நகர்மயமாகி வரும் சூழலில் அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பதிவு செய்யுங்களேன் என்று சொன்னதின் பேரில் அவர் 'வாக்கப்பட்ட பூமி' என்ற தொடரை எழுதினார். அது இப்போது புத்தகமாக வந்திருக்கிறது. அதில் கிராமப் பெரியவர்கள் பஞ்சாயத்தில் தீர்ப்புச் சொல்ல உட்காரும் முன் . " வேதாளம் சேருமேவெள்ளெருக்குப் பூக்குமேபாதாள மூலி படருமேமூதேவி சென்றிருந்து வாழ்வாளேமன்றோர் சொன்ன மனை" என்று சொல்லித்தான் விசாரணையை ஆரம்பிப்பார்களாம். அதாவது தவறாகத் தீர்ப்புச் சொன்னால், தீர்ப்புச் சொல்கிறவர்களின் குடும்பமே அழிந்து நிர்மூலமாகிவிடும் என்பதற்கான எச்சரிக்கை அது. இந்த அச்சம் நெடுங்காலத்திற்கு நியாயமான தீர்ப்புக்களை வழங்கி வந்திருக்கிறது.
சுசி. கணேசன் எழுதியிருந்த இன்னொரு விஷயம் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது:1966ம் வருடம். மதுரை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரி. புதிதாய் துவக்கப்பட்ட கல்லூரி.புதிது புதிதாய் மாணவர்கள்.வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒரு மாணவனுக்கு, புதிய சூழலும் தட்ப வெப்பமும் ஒத்துக் கொள்ளாமல், சூடு கிளம்பி விட்டது. கண்ணில் ஒரு 'கட்டி' புறப்பட்டு விட்டது. பிதுக்கு மருந்து (டியூப் மருந்து) வாங்கிப் போடலாம் என்கிற நினைப்பில் நாகமலைப் புதுக்கோட்டையிலிருக்கும் ஒரு பெட்டிக் கடைக்குத் தன் சகாக்களோடு வந்தார் அந்தக் கல்லூரி மாணவர். அப்போது இப்பகுதியெல்லாம் கிராமம்தான். "கண்ணுல போட ஏதாவது ஆயிண்மெண்ட் இருக்குதுங்களா?" பெட்டிக் கடைக்காரரிடம் கேட்க. "இந்த ஊரில அதெல்லாம் விக்காது தம்பி, மதுரைக்குத்தான் போகணும்" என்றார் அவர். சாமன்கள் வாங்க வந்து நின்ற ஒரு கிராமத்துப் பொம்பளைக்கு இந்த வார்த்தைகள் காதில் விழுந்தன. ஏறிட்டுப் பார்த்தாள். "என்னய்யா, இது, இத்தந்தண்டி கட்டியா கன்ணுல..."என்று விசாரித்துவிட்டு, "அமிர்தத்தை (தாய்ப்பால்) விட்டா சரியாப் போகும்.. செத்த கீழ உட்காரய்யா..."சொல்லிக் கொண்டே தன் நெஞ்சுப்பக்கம், கை கொண்டு போக, வெட்கத்தில் 'வேண்டாம்' என மறுத்தாராம் அந்தக் கல்லூரி மாணவர்.
"...ய்யா.. உங்க ஆத்தா அக்கான்னு என்ன நெனைச்சுக்க .. கண்ணக் காட்டு "என்றபடி தரையில் அவனை மண்டியிட வைத்து கடை வாசலில், ஊர்க்காரர்கள் பலர் நின்றிருக்க அந்த மாணவனின் கண்ணில் பால் பீச்சினார் கிராமத்துப் பெண்மணி.
"ஒண்ணும் பயப்படாதே! நாளைக்கு ஒருவாட்டி வந்து கண்ணுல விட்டுக்க.. கட்டி சருகு போலக் காஞ்சு போயிடும்.." அவள் பேசிக் கொண்டே போக அந்த மாணவனின் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.
மாணவர்கள் சென்ற பிறகு கடைக்காரரிடம் 'அந்தம்மா' சொன்னாராம்: "பெத்த தாய் தகப்பனை விட்டுட்டு, இம்புட்டு தூரம் வந்து நம்மூர்ல படிக்கிறதே இந்தப் புள்ளைக.. திரும்பவும் அதுக ஊர் போய் சேருற வரைக்கும் நாமதானய்யா தாய் தகப்பன்..."
இந்த சம்பவத்தை எழுதிவிட்டு, "இன்று இப்படி நடக்குமா? நடந்திருந்தால் அவளது புருஷனும் அந்த ஊரும் என்ன செய்திருக்கும்?" சினிமாவும் டிவியும் ஆண், பெண், குழந்தைகள், எல்லோர் பார்வையையும் மாற்றி விட்டன. மார்பகங்களை கவர்ச்சிப் பிரதேசமாக, காம உறுப்புகளாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறதே தவிர அவை தாய்மையின் சின்னங்கள் என்ற சிந்தனை யைத் தந்திருக்கவில்லை என்பது அவரது வாதம்.

உண்மைதானா?

(சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதிய பதிவு. சிங்கைக்கு வெளியில் உள்ள வாசகர்களுக்காக இங்கு பதிக்கப்படுகிறது)
----------------
மேலே உள்ள வலைப்பதிவு குறித்த ஒரு பின் குறிப்பு

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிதாக வலைபதிய அளித்துவரும் மைக்ரோசாஃப்ட் ஸ்பேசஸ் என்ற இடத்தில் நேற்று இந்த வலைப்பதிவை வெளியிட்டிருந்தேன். அதன் வார்ப்புருவும் (template) பயனர் அறியத் தரப்படாததால் அதில் 'திரட்டுவது தமிழ் மணம்' என்ற குறிப்பையும் சேர்க்க இயலவில்லை.
அந்த வலைப்பதிவை இங்கு மீண்டும் வெளியிடுகிறேன். வாரம் ஒரு முறை இதில் பதிவுகள் இட முயற்சிக்கிறேன்



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது