ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Tuesday, March 08, 2005

வலைபூக்களால் தூக்கம் போச்சு!

பதிவுகளில் எதைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்று நட்சத்திரப் பதிவாளர் அருணா தனது பதிவில் தந்துள்ள பட்டியலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகளில் பதிவுகளைப்பற்றியும் பதியலாம்!
பின்னூட்டங்கள் பற்றி ஒரு வார்த்தை: ஒரு சாதாரண மனிதனுக்கு இணையத்தில் சொந்த வேலைகளைப் பார்க்கக் கிடைக்கிற நேரம் அதிக பட்சமாக மூன்று மணி நேரம். அலுவலகம் போகும் வரும் நேரத்தையும் சேர்த்து ஒரு பத்துமணி நேரம் வேலையில் போய்விடுகிறது. தூங்குவதில் 8 மணிநேரம். மீதமிருக்கும் 6 மணி நேரத்தில் உடல், மன ஆரோக்கியத்திற்காக (நடை, படிப்பு, குளியல் போன்ற சொந்த hygiene விஷயங்களுக்காக இரண்டு, மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது) மீதமுள்ள மூன்று மணி நேரத்தில்தான் இணையம் உள்பட பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தை நான் Goldern 180 என்று சொல்வதுண்டு. தூங்குவதைக் குறைத்துக் கொண்டால் இதை நீட்டிக்கலாம்தான். ஆனால் ஒரு இரவு ஒரு மணிநேரம் தூங்குவதைத் தள்ளிப் போட்டால் மறுநாள் அந்த ஒருமணி நேரத்தை எப்படியாவது உடல் கேட்டு வாங்கிக் கொண்டு விடுகிறது.
குடும்ப உறவுகள், நட்பு வட்டம் இவற்றைப் பேண சில சமயம் இந்த 3 மணி நேரத்தைக்கூட விட்டுக் கொடுக்க வேண்டி வந்து விடும்.

ஆனால் இந்த golden 180ல்தான் பலர் பல அற்புதங்களை செய்கிறார்கள். காசி தமிழ்மணத்தை ஒரு குழந்தை போல் பேணி தினம் தினம் அதை விதவிதமாக அலங்கரித்துப் பார்க்கிறார். சுரதா எழுத்துரு மாற்றி செய்து தருகிறார்.மதி படிக்கிறார், படம் பார்க்கிறார், எழுதுகிறார். பா.ராகவன் தலையணை தலையணையாக உலக அரசியல் சரித்திரம் எழுதுகிறார். வெங்கடேஷ் நேசமுடன் மடல் வரைகிறார்.மனுஷ்யபுத்ரன் கவிதைகள் புனைகிறார். அருண் வைத்தியநாதன் குறும்படம் தயாரிக்கிறார். சுபா கணினி, சங்கீதம், பயணம், புகைப்படம், மரபு அறக்கட்டளை, ஆரக்கிள், பி.எச்டி என்று ஏழெட்டு வேலைகள் செய்கிறார். இன்னும் பலர் என்னென்னவோ செய்கிறார்கள்.

இதில்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வலைப் பதிவில் எழுதுகிறார்கள். பின்னூட்டம் இடுகிறார்கள்.

எழுதுவதன் நோக்கம் திசைகளின் நோக்கம்தான் அதாவது "அறிதல் ஆக்கல் பகிர்தல்". ஆக்கத்திற்கும் பகிர்விற்கும் முதுகில் சின்னதாக ஒரு ஷொட்டு அல்லது தலையில் ஒரு குட்டு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது. கிடைக்காவிட்டால் ஏமாற்றம் ஏற்படுகிறது.அது மனித சுபாவம்.

ஆனால் சில சமயங்களில் பின்னூட்டங்கள் வெறும் அரட்டைக் கச்சேரியாகப் போய்விடுகின்றன. அசோகமித்ரன் என்ற எழுத்தாளர் 50 ஆண்டுகளை எழுத்துலகில் நிறைவு செய்ததை ஒட்டி ஒரு விழா. தமிழின் 'சிந்தனை டாங்கிகள்' (donkeyகள் அல்ல, tanks) பேசுகிறார்கள். அதை ரிபோர்ட் செய்து பத்ரி எழுதுகிறார். ஆனால் பத்ரி அணிந்து வந்தது அரைக்கால் சட்டையா முழுக்கால் சட்டையா, அது அரைக்காலா, அரைக்கையா இப்படித் திரும்பிவிடுகிறது பின்னூட்டங்கள்! அசோகமித்ரனின் 50 ஆண்டுகள், அரை நொடியில் காணாமல் போய்விடுகிறது. குறைந்த பட்சம் அவர் சோக மித்ரனா அல்லது அ-சோக மித்ரனா என்று தனிப்பட ஆராய்ந்தால் கூடப் பரவாயில்லை. இது ஓர் உதாரணம்தான்.

இது போன்ற பின்னூட்டங்களைப் படிக்கும் போது, ம்...கொடுத்து வைத்த மகராஜன்கள்/ மகராணிகள், எங்கிருந்துதான் இவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ என்று மிட்டாய்க்கடையைப் பார்த்த பிச்சைக்காரக் குழந்தை மாதிரி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு நகர்ந்து விடுவேன்.

இந்த மாதிரி ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கும். எனவே பின்னூட்டம் இல்லாத பதிவெல்லாம் படிக்கப்படாத பதிவுகள் என்றெண்ணிச் சோர்ந்து விட வேண்டாம்.

மற்றெந்த மொழி வலைப்பதிவுகளைக் காட்டிலும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு சில தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றிலொன்று அவையெல்லாம் ஒரே இடத்தில் திரட்டப்படுவது. அதனால் அநேகமாக எழுதப்படுவதெல்லாம் படிக்கப்படுகின்றன.

400வது பதிவாக காசி தனது பதிவை ஆரம்பித்தபோது எல்லோரும் ஏக மனதாக சீக்கிரமே 1000வது பதிவு வரட்டும் என்று ஆசீர்வதித்தார்கள். 1000 பதிவு வந்து அதில் பாதி அளவாவது தினமும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

Golden 180 போதாது. எனவே-

தூக்கம் போச்சு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, March 07, 2005

பூந்தோட்டத்திற்கு வாருங்கள்

இந்த மார்ச் மாதம் திசைகள் தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி தமிழ் வலைப்பூக்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில சுவையான செறிவான, சூடான பகுதிகளளைஇந்த மார்ச் மாதத்திலிருந்து வாரந்தோறும்.. ஒவ்வொரு திங்கள் கிழமையும் வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம் என பிப்ரவரி மற்றும் மார்ச் இதழ்களில் அறிவித்திருந்தோம்.

இன்று முதல் பூந்தோட்டம் என்ற பெயரில் அந்தப் பகுதி திசைகள் இதழில் ஆரம்பம் ஆகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள பகுதியில் மார்ச் 1 முதல் மார்ச் 5 வரையிலான பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை வாசிக்கலாம்.

இம்மாத திசைகளில், 'இந்த இதழில்' என்ற பக்கத்திற்கு சென்று பூந்தோட்டம் என்ற தலைப்பின் கீழ் சொடுக்கினால் அவற்றை நீங்கள் காணலாம்.

அல்லது கீழுள்ள முகவரிக்கு சென்றும் வாசிக்கலாம்.
http://www.thisaigal.com/march05/poonthotam.htmlவலைப்பதிவுகளின் வாசகப் பரப்பை விரிவாக்கும் ஆவலோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலைப்பதிவாளர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் கொள்கிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 03, 2005

ஹிந்தி கட்டுரை - என் தரப்பு என்ன?

எழுதியிருப்பதே போதும், இதற்கு மேலே என்ன சொல்ல இருக்கிறது அதனால் சும்மா இருந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் நான்மிகவும் மதிக்கும் சுந்தரமூர்த்தி போன்றவர்களே இதைக் குறித்துக் கருத்துக்கள் தெரிவித்திருக்கும் நிலையில் சற்று விளக்கமாகவே பேசிவிடலாம் எனத் தோன்றுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

1.நான் என் கட்டுடரையில் எந்த இடத்திலும் இந்தி கற்றுக் கொள்வது என்பதற்கு வட இந்தியர்களுக்கு அடிமையாவது என்று அர்த்தமா? என்ற கேள்வியை நான் எழுப்பவே இல்லை. ஏனெனில் அடிமையாகிறோம் என்றுதான் அர்த்தம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
2.பின் எப்படிக் குழப்பம் நேர்ந்தது? கட்டுரைக்குத் துணைத்தலைப்பிட்ட (துணை) ஆசிரியர் எழுப்பியிருக்கும் கேள்வி அது. நான் கட்டுரைக்குக் கொடுத்திருந்த தலைப்பு "மன்னிக்கவும் யாருடைய மொழியைப் பற்றி பேசுகிறீர்கள்?" (EXCUSE ME, WHOSE LANGUAGE YOU ARE TALKING ABOUT?) இந்தத் தலைப்பின் வெளிச்சத்தில் கட்டுரையைப் படித்தால் புதிய வெளிச்சம் கிடைக்கலாம்.

3.அச்சிதழில் வந்திருந்த இந்தத் துணைத்தலைப்பு இணையப் பதிப்பில் இல்லை.ஆனால் அந்தத் துணைத் தலைப்பை பத்ரி தன் பதிவின் தலைப்பாகக் கொடுத்துவிட்டார். அத்துடன் கட்டுரையைப் பற்றியோ, கட்டுரையின் சுருக்கத்தையோ அவர் தரவில்லை. அது குழப்பம் அதிகரிக்க வகை செய்துவிட்டது என நினைக்கிறேன்.

சுந்தரவடிவேல் கட்டுரையின் ஒரு பகுதியைத் தமிழில் தந்திருக்கிறார். நான் முழுவதுமாகத் தந்து விடுகிறேன். அதற்கு முன் அவர் பதிவில் மதுகிஷ்வர் யார் என்று கேட்டு இருந்தார். அதையும் சொல்லிவிட்டால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். மது கிஷ்வர் மனுஷி என்ற ஆங்கிலப் பெண்கள் இதழின் ஆசிரியர். இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பெண்ணியல்வாதி. ஆங்கிலப் பேராசிரியரும்கூட. அவரது தாய்மொழி இந்தி அல்ல. பஞ்சாபி.

இனி என் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு:


" மது கிஷ்வர் ஓர் இந்தியப் பத்திரிகையாளர். ஒரு முறை பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அமெரிக்கா சென்றிருந்தார். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து போகிற இடங்களில் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தது. அயல்நாட்டி வசிக்கும் இந்தியர்களுடன் அரட்டை அடைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்த போது உரையாடலில் இந்தி வாக்கியங்களையும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்களில் ஓர் இலம் பெண் கோபமாக இடைமறித்தார்:
"இதுதான் நான் உங்களைப் போன்ற வட இந்தியர்களிடம் வெறுக்கும் விஷயம். உங்கள் இந்தி வெறி!"
அந்த ஆக்ரோஷத்தைக் கண்டு பத்த்ரிகையாளர் திகைத்துப் போனார். தர்ம சங்கடமாகவும் இருந்தது. அந்த இளம் இந்தியருக்கு இந்தி தெரியும் என்ற எண்ணத்தில் தான் பேசிக் கொண்டிருந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
"உங்கள் இந்தி எனக்குப் புரிகிறது. ஆனால் அதைத் தமிழச்சியான என் மீது ஏபன் திணிக்கிறீர்கள்? இந்த விஷயத்தில் நான் தமிழ் வெறியள்"

அதற்குப் பின் நடந்த உரையாடலை மது ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்:
"தமிழ் வெறியள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?"

"தமிழர்களாகிய எங்கள் மீது இந்தியை ஒரு தேசிய மொழியாகத் திணிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம்"
"உங்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா?"
"இல்லை. நான் (பள்ளியில்) தமிழ் படிக்கவில்லை. என்னால் தமிழ் பத்திரிகைகளோ புத்தகங்களோ படிக்க முடியாது"
"வீட்டில் தாய் தந்தையரோடு என்ன மொழியில் பேசுவீர்கள்?"
"பெரும்பாலும் ஆங்கிலம்தான்"
"தமிழ்ப் பேச உங்களுக்கு எப்போதாவது வாய்ப்புக் கிடைக்குமா?"
"ஓ கிடைக்குமே! சென்னையில் வசிக்கும் என் தாத்தா பாட்டியைப் பார்க்கப் போகும் போது. பாட்டிக்கு ஆங்கிலம் தெரியாது. அவருடன் பேச வேண்டுமானல் எனக்குத் தெரிந்த தமிழில்தான் பேச வேண்டும். வீட்டில் உள்ள வேலைக்காரர்களோடு பேச வேண்டியிருக்கும். கடைக்காரர்களோடும், தெருவில் பொருட்கள் விற்க வருகிறவர்களிடமும் தமிழில்தான் பேச வேண்டியிருக்கும்"
"பாட்டியின் காலத்திற்குப் பின் என்ன ஆகும்? தமிழ் உங்களைப் பொறுத்தவரை, ஒரு சுய வெளிப்பாட்டிற்கான மொழியாக இல்லாமல், வேலைக்காரர்களிடமும் கடைக்காரர்களிடமும் பேசும் மொழியாக ஆகிவிடாதா?"
"நான் சொல்வது அதில்லை. நான் தமிழை மிகவும் நேசிப்பவள். எனவே தமிழ் நாட்டில் இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டேன்."
"நீங்கள் தமிழை மிகவும் விரும்புபவராக இருந்தும் ஆங்கிலம் எப்படி உங்கள் வீட்டு மொழியாகக்கூட மாறியது?"
"ஆங்கிலம், ஒரு சர்வதேச மொழி, இந்தியாவை இணைக்கும் மொழி"
"ஆங்கிலம் இந்தியாவில் யாருடன் உங்களை இணைக்கும்? மகராஷ்டிராவில் உள்ள விவசாயியுடனோ, குஜராத்தில் மீன் விற்கும் பெண்ணுடனோ நீங்கள் ஆங்கிலத்தில் பேச முடியுமா?"

ஒரு சராசரித் தென்னிந்தியனுக்கு இந்தி கற்றுக் கொள்வதென்பது வட இந்தியனுக்கு அரசியல் ரீதியாக அடிமைப்படுவதற்கு ஒப்பானது என்பதைப் பல வடவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. வட இந்தியாவில் உள்ள சமஸ்கிருதமயமான இந்தி/ இந்து அடையாளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட,தன் தாய்மொழி சார்ந்த அடையாளத்தை வலியுறுத்துவது என்பது தென்னிந்தியாவில் 19ம் நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டது. திமுக, என்.டி.ஆரின் தெலுங்கு தேசம், ராஜ்குமாரின் ரசிகர் மன்ற மேடைகளில் தமிழ் தெலுங்கு, கன்னடம் இவற்றின் பழமையையும், புகழையும் முழங்குவது என்பது சர்வசாதரணமானது.தாய்மொழிசார்ந்த ஒரு பெருமித உணர்வைத் தென்னிந்தியர்களுக்கு ஊட்டியது இந்த இயக்கங்கள் ஆற்றிய பெரும் பணி எனலாம். தென்னிந்தியர்கள், நம்மை அடிமை கொண்டுவிடுமோ என இந்தியைக் கண்டு அஞ்சுவது போல ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.
டாக்டர், சினிமா, டீ, காபி, ரேஷன், சைகிள், போலீஸ், ரயில், டி.வி., போன், ஹலோ, பர்ஸ், பாக்கெட், ரோடு, ஆட்டோ, காலண்டர், டைரி, நெக்லஸ், சோப் இவையெல்லாம் இப்போது தமிழர்களுக்கு ஆங்கிலச் சொற்கள் அல்ல. சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அவை தமிழ் சொற்கள். அவன் அவற்றைத் தன் உரையாடலில், அவற்றின் சரியான அர்த்ததில், அன்றாடம் சரளமாக உபயோகிக்கிறான் ('அசால்ட்' போல தவறாக பயன்படுத்துவதில்லை)

எனவேதான் வெகுஜனங்களின் அன்பைப் பெற்ற எம்.ஜி.ஆர், மொழிப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நாட்களிலேயே, தனது வெற்றிப் படம் ஒன்றிற்கு, ரகசியப் போலீஸ் என்று பெயர் வைத்தபோது எந்த முணுமுணுப்பும் எழவில்லை. அதே போல சிவாஜி தனது படம் ஒன்றிற்கு டாக்டர் சிவா என்று பெயர்சூட்டிய போது யாரும் (அதிர்ச்சியில்) புருவங்களை உயர்த்தவில்லை. இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் அரசியல் அடையாளங்களும் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மொழியின் பெயரால் உரிமைகள் கோரப்படும் போதெல்லாம், இவர்கள் யாருடைய மொழியைப் பற்றி பேசுகிறார்கள்? என நான் யோசிப்பதுண்டு. இரண்டு வகையான தமிழ் இருக்கிறது. ஒன்று காவியங்களில் உள்ள தமிழ். இன்னொன்று தெருவில் பேசப்படும் தமிழ். யாருடைய உரிமைளை, யாருடைய அடையாளங்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுகிறார்கள்? பண்டிதர்களுடைய மொழியைப் பற்றியா? சாதாரண மனிதனின் மொழியைப் பற்றியா?

எனக்கு லூயி கரோலுடைய ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது."நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது அது எதைக் குறிக்க வேண்டுமோ அதைத்தான் குறிக்கிறது.வேறெதையும் கூடவோ குறையவோ அது சொல்வதில்லை" என்றான் ஹம்டி டம்டி, சற்றே ஆணவம் தொனிக்கும் குரலில். "ஒரு சொல் பல அர்த்தங்களைக் கொடுக்க முடியுமா என்பதுதான் கேள்வியே" என்றாள் ஆலிஸ். ஹம்ப்டி சொன்னான் பதிலுக்கு, " எந்த சொல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி" (த்ரூ லுக்கிங் கிளாசில்)
*
இதுதான் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம். இதன் மூலம்
நான் சொல்ல முற்பட்டது. ஒரு மொழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருக்கலாம். ஆனால் எது பொதுமக்களின் சொல்லோ அதுதான் மொழி.பல ஆங்கிலச் சொற்களை சாதாரணத் தமிழன் தமிழ் போல் பயன்படுத்துகிறான் என்றால் அதுதான் தமிழ். பண்டிதர் நாவில் மட்டும் வழங்குவதல்ல)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது