விடை பெறுகிறேன். . . .வேதனையுடன்!
சிறிது நாள்களாகவே எனக்கு ஒரு கவலை இருந்து வந்தது. தமிழ் மணத்தில் வாசிக்கக் கிடைக்கிற வலைப்பதிவுகள் தந்த கவலை அது. தமிழ் வலைப்பதிவுகள் நம்பிக்கையும், கவலையும் ஒரு சேர ஊட்டுவனவாக இருந்து வருகின்றன. சில நேரங்களில் கவலைகளை நம்பிக்கைகள் வென்று விடும். சிலநேரம் கவலைகள் நம்பிக்கைகளைக் கொன்று விடும்.நோயும் மருந்தும் போல. கடைசியில் நோய் வென்று விட்டது.
70களின் மத்தியில் இலக்கியச் சிற்றேடுகளில் நிலவியதைப் போன்ற ஓர் கலாசாரம் இன்று தமிழ் வலைப்பதிவுகளில் நிலவுவதைப் போல ஒர் உணர்வு எழுகிறது.அந்தக் கலாசாரம் இலக்கியச் சிற்றேடுகளுக்கு என்ன பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை அறிந்தவன் என்பதாலும், அத்தகையதொரு விளைவு தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதுவதாலும் கவலை ஏற்படுகிறது.
வலைப்பதிவர்களில் பலர் இளைஞர்களாக இருப்பதால் 70களின் மத்தியில் நிலவிய சிறுபத்திரிகைக் கலாசாரம் என்னவென்று தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குப் புரிவதற்காக கசடதபறவை உதாரணமாகக் கொண்டு சொல்கிறேன். அந்த சிற்றிதழில் ஒரு புறம் சோல்ஷனிட்ஸன் பற்றிய ஓர் தீவிரமான ஆய்வுப் பார்வையில் எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரையோ, அல்லது அம்பை தனது படைப்பாற்றலின் உச்சத்தில் எழுதிய அம்மா ஒரு கொலை செய்தாள் கதையோ இடம் பெற்றிருக்கும். இன்னொருபுறம் வெ.சாமிநாதனின் அல்லது வெ.சா. மீதான எள்ளல்கள், வசைகள், சாடல்கள் இடம் பெற்றிருக்கும்.
அன்றைய சிறு பத்திரிகைகளின் கலாசாரத்தை சுருக்கமாக இப்படிப் பட்டியலிடலாம்:
* நியோ நார்சிசம்: அதாவது தன்னைத்தானே வியந்து கொள்ளல்.
* வீர வணக்கம்: தனக்கு உவந்த ஒரு எழுத்தாளரை அல்லது ஒரு கருத்தியலை, வழிபாட்டு நிலையில் அணுகுவது அல்லது பீடத்தில் ஏற்றி வைத்துக் கும்பிடுவது. அந்த நபரை/ கருத்தியலை விமர்சிப்பவர்களை எதிரிகளாக எண்ணி இகழ்ந்துரைப்பது, ஏளனம் செய்வது, அல்லது வசை பாடுவது
*வசைத் தொற்று: ஒரு இதழில் எழுதப்பட்ட கருத்து குறித்து அந்த இதழுக்கே தனது மாற்றுக் கருத்துக்களை எழுதி அங்கே ஓரு விவாதக் களனை உருவாக்காமல், வேறு ஒரு சிறு பத்திரிகைக்கு எழுதி, சச்சரவைப் பரப்புவது. கசடதபறவில் அசோகமிரன் எழுதிய கட்டுரைக்கு பதில் அஃக்கில் வரு, அஃகில் வந்ததற்கான கருத்து கொல்லிப்பாவையில் வரும். கொல்லிப்பாவைக்குத் தொடர்ச்சி இலக்கிய வட்டத்தில் வரும். இப்படி. இதன் காரணமாக மொத்த சூழ்லையுமே ஒரு பூசலிடும் மனோபவத்தில் வைத்திருப்பது
*துச்ச மொழி: இலக்கிய ஊழல், நபும்சகம், பேடிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எனக் கடுமையான வசைமொழிகளை, குற்றம் சாட்டப்படுபவரின் மற்ற தகுதிகள், படைப்பாளுமை இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அள்ளி வீசுவது. உதாரணத்திற்கு தினமணிக் கதிர் ஜெயகாந்தனின் ரிஷி மூலம் கதையைப் பாதியில் நிறுத்தியது. அதே போல சில வருடங்கள்கழித்து இந்திராபார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பாலும் பாதியில் நிறுத்தப்பட்டது. இபா தனது அனுபவம் குறித்து கணையாழியில் எழுதினார். அதைத் தொடர்ந்து கசடதபறவில் வெ.சா எழுதினார். அதைக் கேள்விப்பட்ட ஜெ.கா, இப்போது இவ்வளவு கூச்சல் போடுகிறவர்கள், என் கதை நிறுத்தப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள்? என தன் நண்பர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டார்.அந்த வேளையில் அ.மி. அழவேண்டாம், வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் என ஒரு கட்டுரை வெ.சாவிற்கு பதில் சொல்வது போல எழுதினார். அதைத் தொடர்ந்து வெ.சாவின் இலக்கிய ஊழல்கள் என்ற பிரசுரம் வெளியாயிற்று. அதில் ஜெ.கா, அ.மி எல்லோருக்கும் அர்ச்சனை நடக்கும். அந்தப் பிரசுரத்தில் இந்தச் சொற்கள் தாராளமாக இறைக்கப்பட்டிருக்கும்.
* குழிப் பிள்ளையைத் தோண்டி அழுதல்: என்றோ நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை இன்றைய சர்ச்சையில் ஒரு பாயிண்ட்டாகப் பயன்படுத்துதல். எதிரி அதற்கு விளக்கமளிக்க முற்படுவான். கவனம் அங்கே திரும்பும். பேசவந்த பிரசினை பின் தள்ளப்பட்டுவிடும்.
*திரிப்பு: வேறு ஏதோ ஒரு சூழ்நிலையில் சொல்லப்பட்ட கருத்தை அந்த context ஐ மறைத்துவிட்டு தன் வசதிக்குத் தக்கவாறு பயனபடுத்திக் கொள்ளல்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிவில் சமூகத்தில், விவாதங்களில் எவையெல்லாம் பின்பற்றத் தகாத மரபுகளோ அவையெல்லாம், பொதுவாக, அப்போது சிறு பத்திரிகைகளின் விவாதங்களில் பின்பற்றப்பட்டன. இதன் பின் விளைவு என்பது எல்லோரும் கூச்சலிட்டுச் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, சக்தி இழந்து கசப்புணர்வுடன் வீழ்ந்தனர். 70 களில் ஏராளமான சிறுபத்திரிகைகள் இருந்தன;80களில் சிறு பத்திரிகை இயக்கம் நைந்து நூலாகின.
இதே போன்ற ஒரு திசையை நோக்கி வலைப்பதிவுகள் நடக்கின்றன என நான் அஞ்சுகிறேன். இல்லை என மறுப்பவர்கள் அண்மையில் நட்ந்த விவாதங்களில் மேலே சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் காணப்பட்டனவா இல்லையா என பரிசீலித்துப் பாருங்கள்.
எல்லாப் பதிவுகளுமே அப்படி இருக்கின்றன என்று நான் சொல்லவரவில்லை. தங்கமணி, சுந்தர மூர்த்தி, வெங்கட் போன்றவர்கள் விவாதங்களை, மேலே சொன்ன நோய்க்கூறுகளிலிருந்து விடுவித்து அறிவார்ந்த ஒரு முயற்சியாக மாற்ற பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நோய்க்கூறான மனோபாவங்களை உணர்ந்து கொள்கிறவர்கள் கூட, ' நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி நிற்கிறார்கள்.
இன்று சச்சரவாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆரம்பத்தில் கான்சர் செல்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். நாட்செல்லச் செல்ல அவை மற்ற புலன்களின் திறனைக் குறைத்துவிடும்.
இது போன்ற சிந்தனையில் நான் இருந்த போது, பி.கே.சிவகுமார் தனது வலைப்பதிவில் என்னைப் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு என் கவலைகளை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. திசைகள் ஏப்ரல் இதழில் வெளியிட்டிருந்த மாலன் படைப்புலகம் கருத்தரங்கம் பற்றிய ரிபோர்ட்க்கு அவர் எதிர்வினை ஆற்றியிருந்தார்.
அவர் எதிர்வினை ஆற்றியது குறித்து எனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை. ஆனால் அதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும் மொழி, அந்தக் கட்டுரையின் sub-text, எனக்கு வருத்தமளிக்கிறது.
திசைகளின் அந்தக் கட்டுரை, அந்தக் கருத்தரங்கமே, காலச்சுவடில் வெளியான ஒருவரது விமர்சனத்திற்கு வைக்கப்பட்ட பதில் என்பதைப் போல தோற்றம் உருவாக்கப்படுகிறது. காலச்சுவடு விமர்சனத்தின் தலைப்பு: லட்சியத்தில் விழுந்த ஓட்டைகள். சிவகுமார் திசைகள் பற்றிய தனது பதிவிற்கு வைக்கும் தலைப்பு: ஓட்டையை மறைக்கும் லட்சியங்கள்.
உண்மையில் காலச்சுவடு விமர்சனத்திற்கும் கருத்தரங்கிற்கும் தொடர்பு இல்லை. கருத்தரங்கம் நடைபெற்றது மார்ச் 14ம் தேதி. காலச்சுவடு வெளியானது ஏப்ரல் முதல் வாரத்தில். காலச்சுவடில் என்ன வரப்போகிறது என்று எனக்கு எப்படியே முன் கூட்டியே தெரிந்திருக்க முடியும்?
திசைகள் கட்டுரையில் ஏன் புகழுரைகளே காணப்படுகின்றன என்று சிவகுமார் கேட்கிறார். நியாயமான கேள்வி. ஆனால் அதைக் கேட்கும் முன் விமர்சனமாகக் கருத்தரங்கில் பேசப்பட்டதா என்று அவர் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எனக்கே கூட எழுதித் தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது திசைகள் கட்டுரைக்கான எதிர்வினையாக, திசைகளுக்கே எழுதி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கலாம். இதையெல்லாம் விட்டு எள்ளல் மொழியில் தன் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்.
அவர் என் நூல்கள் மீதான கால்ச்சுவடின் விமர்சனத்தை வெளியிட விரும்பியிருந்தால் அதை நேரடியாக வெளியிட்டிருக்கலாம். திசைகளை இழுக்க வேண்டியதில்லை. அப்படியே அவர் திசைகளைப்பற்றி எழுத வேண்டும் என்றாலும் இந்த மொழியை உபயோகித்திருக்க வேண்டியதில்லை.
கருத்தரங்கில் நான் உவப்பாக ஏற்புரை அளித்ததாக சொல்லி அதே போல காலச்சுவடின் விமர்சனத்திற்கும் பதில் சொல்வேனா என்று வினவுகிறார். நான் என் நூல்களைப் பற்றி எழுதப்படும் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொன்னதில்லை. அப்படி சொல்வது பண்பாடல்ல. விமர்சனம் என்பது ஒரு கருத்து. ஒருவரது கருத்து. அவ்வளவுதான். அதற்கு மேல் அதற்கு வேறு significance இல்லை. ஒரு கூட்டத்தில் ஏற்புரை வழங்குமாறு அழைக்கப்பட்டால் அந்த அழைப்பை ஏற்று சில வார்த்தைகள் சொல்வது என்பது வேறு. அது ஒரு சபை நாகரீகம். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கூடவா சிவக்குமாருக்கு தெரியாது? அந்த இடத்தில் சிவக்குமார் என்ற கபட சந்நியாசி வெளிப்படுகிறார்.
இன்னொரு இடத்தில், ' எமெர்ஜென்சியையே எதிர்த்தவர்' என்று நக்கல் செய்கிறார். நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன் என்பது பதிவு செய்யப்பட்ட ஒன்று. எமர்ஜென்சியையே என்பதில் உள்ள ஏகாரம் அவர் செய்யும் ஒரு திரிப்பு. நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன், ஜெயகாந்தன் போல அதற்கு ஜால்ரா போடவில்லை. நான் எழுதிய கதை பாலத்தில் வெளியானது. நான் எழுதிய கவிதை கணையாழியில் வெளி வந்தது. அதை ஆங்கிலத் தொகுப்பிற்காக தேர்ந்தது நான் அல்ல. டஃப்ட் பல்கலை பேராசிரியர் ஆலிவர் பெர்ரி. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தமிழவன். இத்தனை சான்றுகள் இருக்கின்றன. இதில் எதற்கு எள்ளல்?
நான் பொய் சொல்கிறேன் என்பதைப் போல ஒரு இடத்தில் எழுதுகிறார். ஒரு இடத்தில் நான் என்னைப் பற்றிய தவறான அல்லது மிகைப்பட்ட பிம்பங்களை இணையத்தில் உருவாக்குகிறேன் என்கிறார். இவையெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள். நான் என் பதிவுகளில் என்னைப் பற்றிய விபரங்களையோ, படங்களையோ, சுயசரிதைகளையோ வெளியிட்டுக் கொண்டதில்லை. திசைகள் தவிர வேறு மின்னிதழ்களில் எழுதுவது இல்லை. திசைகளில் பொதுப் பிரசினைகள் பற்றி எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி எழுதியதில்லை. நான் கலந்து கொண்ட விழாக்களைப் பற்றிய செய்திகளைக் கூட மற்ற வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் எழுதியவற்றை, அல்லது நாளிதழ்களில் வெளியானவற்றைத்தான் பிரசுரித்திருக்கிறேன். என் நூல்களைப் பற்றி பாராட்டி எழுதிய விமர்சனங்கள் பல பத்திரிககைகளில் வந்திருக்கின்றன. அவற்றை மீள் பிரசுரம் செய்ததில்லை.
இணையம் என்பது ஒரு சிறு வெளி. அதில் இருப்பவர்கள் இணையத்தை மட்டும் படிப்பவர்கள் அல்ல. வெளி உலகப் பழக்கமும் உள்ளவர்கள். அவர்கள் என்னை அவற்றின் மூலம் ஏற்கனவே அறிந்தவர்கள்தான். எனவே எனக்கு பிம்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எழுத்துத் திறமை இல்லாத என்னை சன் டிவி போஷிக்கிறது என்பதைப் போல ஓரிடத்தில் எழுதுகிறார் ( வஞ்சப் புகழ்ச்சியாக) எனக்கு எழுத்துத் திறமை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன அவமானம். எல்லா மனிதர்களுக்கும் எழுதும் திறமை இருக்க வேண்டுமா என்ன? ஒரே நேரத்தில் என்னை, என்னைப் பிரசுரித்த பத்திரிகைகளை, அதன் ஆசிரியர்களை, அதன் வாசகர்களை அவமானம் செய்கிறார்.
சிவக்குமார் இப்படித் தனிப்படக் காழ்ப்பு உமிழ என்ன காரணம்? Malice! நான் ஜெயகாந்தனை விமர்சித்தது. அவரால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதனாகக் கருதப்பட்டு வழிபடப்படும் ஜெயகாந்தனை விமர்சித்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் இதை இன்று மறுக்கலாம். ஆனால் அதற்கான சாட்சியங்கள் அவர் பதிவில் இருக்கின்றன. சினிமா நட்சத்திரத்தின் ரசிகன் படம் சேகரிப்பது போல ஜெகேயை வியந்து எழுதுகிற கட்டுரைகளைத் தொகுக்கிற செயலில் இருக்கிறது.
என்னுடைய எழுத்துக்களை நான் இணையத்தின் மூலம்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. வலைப்பதிவுகளில் எழுதித்தான் நான் கவனம் பெற வேண்டும் என்ற நிலை இல்லை.
மிகப் பெருமிதத்தோடு சொல்கிறேன்: நான் என் சிறுகதைகளில் தொட்டு எழுதிய விஷயங்களை என்னுடைய சமகாலத்தவர் எவரும் எழுதியதில்லை. அது வைக்கிற தர்க்கங்களை யாரும் வைத்ததில்லை. சான்றுகளும் தெம்பும் இருப்பவர் மறுக்கலாம்
தமிழிலும் வலைபதிக்க முடியும் என்பதை தமிழ் இணைய வாசிகளுக்கு மெய்ப்பிக்கும் பொருட்டே நான் வலைப்பதிவுகளில் அக்கறையும் கவனமும் செலுத்தி வந்தேன். திசைகளைப் படித்து வலைபதிய வந்ததாக பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது கூட நான் என் பிம்பங்களைத் தயாரிப்பதற்காக மேற்கொள்லும் ஒரு முயற்சி எனத் திரிக்கப்படும் அபாயம் இருக்கிறது என உணர்கிறேன்.
எனவே இனி வலைப்பதிவுகளில் எழுதுவது இல்லை, அவற்றைப் படிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்.
வலைப்பதிவுகளில் தேர்ந்தவற்றை வாராவாரம் வெளியிடும் பணி இன்னும் ஓர் இரு வாரங்கள் தொடரும். பின் அதுவும் நிறுத்தப்படும்.
வலைப்பதிவுகளில் சிறந்தவற்றிற்குப் பரிசளிப்ப்பதாக திசைகள் அறிவித்த திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை. அவற்றைத் தேர்ந்தெடுத்துத் தர இசைந்துள்ள நடுவர் குழுவின் முடிவுகளை திசைகள் மதிக்கும்.
இந்தச் சிறு மின் வெளியில் என் மீது நேசம் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. அவர்களை என்றும் நினைவில் கொள்வேன்.
தமிழில் வலைப்பதிவுகளைத் துவக்கவும், அவை பற்றி சிந்திக்கவும் தூண்டிய பத்ரிக்கு சிறப்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வலைப்பதிவுகளிலிருந்து வெளியேறக் காரணமான திரு.பி.கே. சிவக்குமாருக்கும் நான் நன்றி சொல்கிறேன். இனி என் தங்க 180 நிமிடங்களை ஆக்கபூர்வமாக வேறு எங்கோ செலவிட முடியும். அதற்காக அவருக்கு நன்றி.
வேதனையுடன்,
மாலன்